Wednesday, July 19, 2006

சினிமா...சினிமா

சமீபத்தில், உயிர் என்றொரு படத்தின் விமர்சனம் படிக்க நேர்ந்தது. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

நமது சிறப்புத் தன்மை [மேலை நாட்டவரைக் காட்டிலும்] உறவின் வலிமை தான். பெற்றோர் - மக்கள் உறவு, அண்ணன் - தம்பி பாசம், தாய்க்குப்பின் தாரம், அம்மா இடத்தில் அண்ணி, என்று நாம் போற்றி வழிபடும் உறவுமுறை பலவுண்டு.

ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவிற்கு என்ன கேடு பிடித்தது தெரியவில்லை, இந்த உறவுகளை கொச்சைப் படுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கோர தாண்டவம் ஆடுகிறது.

கண்ணைக் மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நான் சொல்லவில்லை. இங்கொன்று, அங்கொன்று என்று இத்தகைய கேடு கெட்ட வாழ்வுமுறை சமூகத்தில் பரவி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் - அது எனக்கு தெரியாது. ஆனால், இத்தகைய படங்களின் மூலம் சொல்ல வருவது என்ன என்று புரியவில்லை.

யாராவது ஒருவர் இத்தகைய படங்களை விமர்சிக்கும் போது, 'அகிரா குரசேவா' படங்களில் வரும் யதார்தத்தைப் போல் இந்த படத்திலும் தத்ரூபமாக வந்துள்ளது என்று கருத்து தெரிவிப்பார். அந்த நளினத்தை உண்ர்ந்து கொள்ள முடியாத ஒரு சராசரி மனிதனின் அறியாமையை எண்ணி வருந்துவார். ஆனால், படம் எடுக்கப் படுவது இத்தகைய சராசரி மனிதர்களை குறி வைத்து தான் என்றும், படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அகிரா குரசேவா பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் யார் உணர்வது, உணர்த்துவது?

சட்டத்தை பற்றி சொல்லும் போது சொல்வார்கள். "...ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது..."

அதே போல், சினிமாவிற்கும் ஒரு நெறிமுறை வர வேண்டும். "...ஆயிரம் தீய எண்ணம் உடையவர்கள் திருந்தாமல் போகலாம். ஆனால், ஒரு நல்ல மனம் கள்ள மனம் ஆகிவிட கூடாது..." என்று.

பூனைக்கு யார் மணி கட்டுவது? சென்ஸார் போர்டு என்ன செய்ய முடியும்...தெரியவில்லை!

...பிரைட்

0 Comments:

Post a Comment

<< Home