அசுர வேதனை
எனக்கு இரண்டு மகன்கள். மகள் இல்லை என்று சிறிய எண்ணம் மனதின் ஓரத்தில் எப்பொழுதும் ஒளிந்து கொண்டிருக்கும். அதிலும், தந்தை - மகள் உறவின் மகத்துவம் பற்றி படமோ, பரிந்துரையோ பார்க்கும் போது, சில சமயம் கடுப்பானதுண்டு. நிற்க, அதற்கும் இந்த பதிவிற்கும் தொடர்பு இருக்கா, இல்லையா, தெரியவில்லை. ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அசுரன் படம் பார்த்த போது, ஒரு தந்தை, தன் மகனை காப்பற்றப் படும் வேதனை, தாங்கிக் கொள்ளும் அவமதிப்பு, அந்த தந்தைக்காக, மகனின் பழிவாங்கல் நடவடிக்கை என்று ஒரு திருப்தி தரும் அனுபவம். படம் பார்க்கும் அனுபவத்தில் ஒரு மகள் இல்லாத வெறுமை தெரியவில்லை.
பொதுவாக, சினிமாவில், தவறு நடக்கும் இடத்தில் திடீரென்று தோன்றி வில்லனை அடித்து, தவறை தட்டி கேட்கும் ஹீரோவை பார்த்து புல்லரித்து விசில் பறக்கும். நம்மால் நிஜ வாழ்வில் செய்ய முடியாத ஒன்றை சினிமாவில் ஒரு ஹீரோ செய்வதை பார்க்கும் போது, இது போல் ஒரு ஹீரோ நிஜ வாழ்விலும் நம் துயர் துடைக்க வர மாட்டாரா, என்ற ஒரு பேராசை ஏற்படுவது இயல்பு.
அசுரனில், தன் மகனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக் அடங்கிப் போகும் ஹீரோ, அந்த மகனின் உயிருக்கு ஆபத்து வரும் போது பொங்கி எழுவது உண்மையில் படம் பார்க்கும் போது எனக்கு புல்லரித்தது. அந்த சமயத்தில் நடக்கும் ரத்த களரி அப்போது பெரிய தவறாக தெரியவில்லை...ஏதோ என் மகனை காப்பாற்ற நடக்கும் ஒரு போராட்டம் போல் அப்போது சரியாக பட்டது. படம் முடியும் போது ஹீரோ சொல்லும், நம்ம புள்ளைய நல்ல பாத்துக்கணும்; நல்லா படிக்கணும். படிப்ப மட்டும் தான் நம்ம கிட்ட இருந்து யாராலயும் புடிங்கிக்க முடியாது என்று சொன்னது ரொம்ப நல்ல விஷயமா பட்டது.
வெற்றிமாறனின் பிற படங்களைப் போல், படம் முடிந்த பிறகு, ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம் தோன்றியது. இப்படி ரத்தகளரியான ஒரு படம் பார்க்கும் போது, அதில் எதுவும் தவறே இல்லை, எல்லாமே இயல்பானதுதான் என்பது போல் படம் பார்த்ததால் ஏற்பட்ட ஒரு குற்றவுணர்வோ என்று குழப்பம். நிஜ வாழ்க்கைகும், மாய வாழ்க்கைக்குமான கோடு, இன்னும் மெல்லியதாகிக் கொண்டே போகிறதோ என்று ஒரு எண்ணம். எங்கு மாய வாழ்க்கை முடிந்து, எங்கு நிஜ வாழ்க்கை தொடங்கும் என்ற தெளிவு குறைந்துக் கொண்டே வருகிறதோ என்று ஒரு வேதனை.
அசுரன் என்பது ஒரு கலைஞனின் நல்ல படைப்பு என்று போற்ற தோன்றினாலும், இப்படி ஒரு குரூரம் அவசியமா என்று ஒரு தெளிவில்லாத வேதனை மனதை உருத்தியபடி இருக்கிறது!
0 Comments:
Post a Comment
<< Home