மெய்யழகன் - மெய்யான என் அனுபவம்!
எப்போதாவது ஒரு நிகழ்வு நமது இனிமையான பழைய நினைவுகளை, ஒரு அழகிய மயிலிறகில் வருடுவது போல் வருடி, ஞாபகப்படுத்தும். அந்த நிகழ்வானது, நாம் படிக்கும் ஒரு கதையாகவோ, கேட்கும் பாடலாகவோ, பார்க்கும் படமாகவோ இருக்கலாம். அத்தகைய நிகழ்வை, நம்மை அறியாமல் கண்களின் ஓரத்தில் மின்னும் கண்ணீர்த்துளி உணர்த்தும். அது போன்ற ஒரு உணர்வை நான் உணர்ந்த ஒரு அழகான படம் மெய்யழகன்.
நமது நண்பர்களை தேர்வு செய்யும் முடிவு நம்மிடம் உள்ளது. ஆனால், உறவுகளை? யார்யாராக இருப்பினும், நமக்கு கிடைத்த உறவு, இந்த வாழ்வின் வரம் (அல்லது சாபம்). நமக்கு நம்மை அறிமுகப்படுத்தி, நமக்கு ஒரு அடையாளத்தை முதலில் கொடுக்கும் இந்த உறவின் வலிமையை அவ்வளவு அழகாக செதுக்கியிருந்த இந்த படத்தை பார்க்கும் போது, தமிழ் சினிமாவின் மீது மீண்டும் மரியாதை வந்தது.
எத்தனையோ காரணங்களுக்காக சொந்த ஊரையும், சொந்தங்களையும் விட்டு விட்டு, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் இந்த படம் மலரும் நினைவுகளாய் இருந்திருக்கும்.
“வடசென்னை” படத்தில் தனுஷ் “…எங்கெல்லாம் சுத்தினாலும், திரும்ப வரும் போது நம்ம ஊரு இருக்குங்கிற…” நம்பிக்கை பற்றி சொல்லுவார். இந்த படத்தை பார்த்த பின்பு, அப்படி ஒரு நாள் நாம் திரும்ப வரும் போது, “மெய்யழகன்” போன்ற ஒரு உறவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
இவ்வளவு அழகான இந்த படத்தை படைத்த அனைத்து கலைஞர்களும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.