பொள்ளாச்சி, பொல்லாட்சி ஆனதோ
கடந்த இரு நாட்களாக செய்திகளில் படிப்பதும், காணொளியில் பார்த்ததும், மனதை அச்சுறுத்துகிறது. நான் ஒரு நடுத்தர மனிதன். என் மனதுக்கு தெரியாத ஒரு நிகழ்வின் தாக்கம் எத்தகையது என்று உணரக்கூடிய அளவு பக்குவப்படவில்லை என்றே சொல்லலாம். நான் இருக்கும் இடத்திற்கு எதிரி வர முடியாது என்று உறுதி படுத்தியப் பிறகு, செய்தியில் படித்த நிகழ்வுதனை அலசி ஆராயும் சிறிய மனம் தான். அத்தகைய ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் போதும், பொள்ளாச்சி சம்பவம் நெஞ்சை உலுக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண பொதுமக்கள். பாதிப்புக்கு உள்ளாக்கியோர்கள் அவர்களைப் போல சாதாரண பொதுமக்கள் தான். ஆனால் இத்தகைய கொடிய மிருக மனம் வெளிப்படுத்தியவர்கள் சாதாரண மக்களோடு மக்களாகத்தான் உலவி இருக்கிறார்கள் என்று உணரும் போது, உடலே நடுங்குகிறது…கலங்கிய மனம் இன்னும் ஒரு நிலைப்படவில்லை.
“உன்னை நம்பித்தானே வந்தேன்” என்ற சொல்லுவது, வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு உறவின் அஸ்திவாரம், அந்நிலையில் எற்படுத்தும் நம்பிக்கைத் துரோகத்தின் வலி இன்னும் வலிக்கிறது.
பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் இல்லை தீர்வு. ஆண்களும் பண்போடும், தங்கள் எல்லை அறிந்தும், கவனமாக இருக்க வேண்டும் என்பது தீர்வுக்கான முதல் படி…
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…
அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே!”
எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களைப் பொறுப்போடும், மனித நேயம், சக மனிதர்களின் மேல் மரியாதை, பணிவு, நேர் கொண்ட பார்வை, சமூக நெறி ஆகிய பண்புகளோடும் வளர்த்து, நல்ல மனிதர்களாக சமூகத்திற்கு கொடுக்கும் பெரிய பொறுப்பை உணர்கிறேன்.
ஊருக்குள் சாக்கடை வருவது புதிதல்லை. ஆனால், அந்தச் சாக்கடை குடிநீரில் கலந்து விடாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான வழிமுறைகளை ஏற்படுத்துவார்கள் என்று ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம். ஆனால் அந்த நம்பிக்கையின் நிலை? ஆட்சியின் நிலை?