Monday, October 10, 2022

மௌனம்

மௌனம்

கற்றுக்கொள்ள எளிமையான

ஆனால் 

பயன்படுத்தவும்,

புரிந்துகொள்ளவும் கடினமான

ஒரு மொழி!


உப்பின் கதை

"உப்பில்லாத பண்டம் குப்பையிலே" - அந்த வீட்டின் அடுப்படியிலே இருந்த உப்பிற்கு இதைக் கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்து விடும். வழக்கமாக அந்த வீட்டு சமையலில் உப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கும். யாராவது விருந்தினர் வந்து, சாப்பாடு ரொம்ப அருமை...ஒரு சிட்டிகை உப்பு மட்டும் போட்டிருந்தால், அமிர்தமாயிருக்கும் என்று சொன்னால், உப்பை கையில் பிடிக்க முடியாது. 

இப்படி உப்புவின் பெருமையைக் கேட்டு அந்த வீட்டு உப்புவிற்கு கொஞ்சம் தலை கனம் வந்துவிட்டது. ஒரு முறை அந்த வீட்டில் நடைபெற்ற விருந்தின் போது, உப்பு ஆர்வக்கோளாரில் அதிகமாக கலந்து கொண்டது. அவ்வளவு தான்...அது வரை தேவ அமுதம் என்று கொண்டாடப்பட்ட உணவை, அனைவரும் "தூ" என்று காரித் துப்பினார்கள். ஒரே உப்பு என்று உணவு குப்பையாக வீணடிக்கப்பட்டது. அந்த உப்பிற்கு ஒன்றும் புரியவில்லை. கம்மியாக இருக்கும் போது கொண்டாடியவர்கள், கொஞ்சம் அதிகமானவுடன் எதற்கு தூக்கி எறிந்தார்கள் என்று அது இன்றும் குழம்பி போயுள்ளது. 

சில சமயங்களில் நமது அன்பும் இந்த உப்பை போன்று தடுமாறுகிறது. என்னிடம் கொடுக்க அதிக அன்பு இருக்கிறது என்பதற்காக, அடுத்தவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஒரு நியாயமும் இல்லை. ஆனால், அதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதாகவும் இல்லை!!